About.

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற மகுடவாசகத்திற்கு முற்றிலும் உண்மையாகத் தன் வாழ்நாள் முழுவதும் இயங்கி, உலக நாடுகளிலெல்லாம் தமிழின் தொன்மை வரலாற்றையும் சிறப்பையும் பரப்பிய ஈழத்தவரான தனிநாயக அடிகளாரினால் தமிழியல் உலகநாடுகளில் நிலைபேறடைந்தது. அடிகளாரின் சிந்தனையில் தோற்றம்பெற்ற அறிவுச்செல்வங்களான Tamil Culture ஆய்விதழ், International Association of Tamil Research (IATR) என்கிற உலகத் தமிழாராய்ச்சி மன்றம் நடாத்திய தமிழாராய்ச்சி மாநாடுகள், உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினால் வெளியிடப்பட்ட Journal of Tamil Studies ஆய்விதழ் ஆகியவற்றினை ஆவணப்படுத்துமிடமாக இவ்வலைத்தளம் இயங்கும்.

1952-1995 இடைப்பட்ட காலத்தில் தமிழியல் தொடர்பில் எழுந்த இவ் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் கூட்டுத்தொகுப்பிற்கு மேலானதும் நிகரானதுமான ஒன்று இல்லை. 2 ஆய்விதழ்களின் 47 வெளியீடுகள், 8 உலகளாவிய மாநாடுகள், 2 தேசிய மாநாடுகள், 1086 ஆய்வாளர்கள், 1855 ஆய்வுக் கட்டுரைகள் என்ற கூட்டுத் தொகுப்பிற்கு ஆதாரமான ஆய்வுத் தொகுதிகள் வெளியீடுகள் அனைத்தும் ஒரே இடமாகப் பேணப்படவில்லை. தமிழ்நாட்டின் முதன்மைப் பல்கலைகழக நூலகங்களிற்கூட இவை யாவும் ஒரே இடமாக இல்லை. மேலும் இத்தொகுதிகள் ஒருமுறைதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளதால், கால ஓட்டத்தில் தொகுதிகள் பலவும் சிதைவுற்றுப் பொதுவில் கிடைக்கும் நிலையும் இன்று இல்லை. இன்றைய தலைமுறையினருக்கு அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் உண்மையான அதன் வரலாற்று வகிபாகத்தினைத் தெளிவாகத் தெரிந்துகொள்வதற்கான களமாக ஆவணப்படுத்தலைச் செய்துள்ளோம்.